பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24 படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை சமந்தா. இவர் விஜய், சூர்யா, விஷால், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து அனைவராலும் அறியப்பட்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் டப்பிங் பணிகளை சமந்தா ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டு செய்தார். இதுகுறித்து அவர் பதிவிட்டது, உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்புதான், வாழ்க்கை எனக்கு அளிக்கும் சவால்களைச் சமாளிக்க வலிமை தருகிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மியோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது.
முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும். இந்த பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு’ என்று பதிவிட்டார். இவரின் இந்த பதிவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இவர் விரைவில் குணமடைய பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மையோசைட்டிசிற்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சமந்தா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த அவர் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகவில்லை.