‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் 2018-ல் தெலுங்கில் வெளியான ‘மகாநதி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘சாணிக் காயிதம்’ மற்றும் ‘சர்காரு வாரி பாட்டா’ படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, கீர்த்தி சுரேஷ் நடிப்பை பலரும் பாராட்டினர்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நீண்ட அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு நடிகராக இருப்பது என்பது கடினமான பயணம், நாங்கள் முழுவதும் உயர்வையும் தாழ்வையும் காண்கிறோம். அதுவே பெரும்பாலும் நமது இலக்கைத் தீர்மானிக்கிறது. சமீபகாலம் எனக்கு ஒரு சோதனையான காலகட்டமாகும், மேலும் எனது சிறப்பை உலகிற்கு கொண்டு வருவதற்கு நான் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதை உணர வைத்த ஒரு கட்டம். என் இதயம் முழுவதும் நன்றி உணர்வோடும் சந்தோஷமும் நிறைந்துள்ளது, ‘சாணி காயிதம்’ மற்றும் ‘சர்காரு வாரி பாட்டா’ படங்களுக்கு நிறைய அன்பு கிடைத்தது. நான் எப்போதும் எல்லைகளை தாண்டி, விரிவுபடுத்தப்பட்ட நம்பிக்கையோடு முன்னேறி கொண்டு இருப்பேன். விளைவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டேன்” என்று பதிவிட்டு ‘சாணி காயிதம்’, ‘சர்காரு வாரி பாட்டா’ படக்குழுவினருக்கும், அவர் பணியாற்றிய இயக்குனர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.