நடிகர் விஜய் ஆண்டனியின் உடல் நிலை குறித்து இயக்குநர் சுசீந்திரன் விளக்கம்
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருந்தும் வாய் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் மூலம் சென்னையில் பிரபல மருத்துவமனையில் விஜய் ஆண்டனி அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், விஜய் ஆண்டனியின் உடல்நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பிச்சைக்காரன்-2 படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி 2 நாட்களுக்கு முன்னாடியே சென்னையில் அவரு வீட்டுக்கு வந்துட்டாரு. 2 வாரம் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க சொல்லிருக்காங்க, கூடிய சீக்கிரம் ரசிகர்கிட்ட வீடியோ மூலமா பேசுவாரு, ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம், விஜய் ஆண்டனி பற்றின தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்னு கேட்டுகிறேன்…” என்று தெரிவித்துள்ளார்.