நடிகர் விஜய்க்கு அறிவுரை சொல்லும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதையடுத்து இந்நிகழ்ச்சி நேற்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. இந்நிலையில், ‘சுப்ரமணியபுரம்’, ‘நாணயம்’, ‘ஈசன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் தோற்றம் குறித்து விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “வாரிசு பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது.

தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது. அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்.

நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே?

ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.

நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே. ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லை. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்!

முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools