Tamilசினிமா

நடிகர் வடிவேலுவின் சகோதரர் இன்று காலமானார்

தமிழில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவருக்கு மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருந்தனர். அனைவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனத்தில் வசித்து வருகின்றனர். இவரது இரண்டாவது சகோதரர் ஜெகதீஸ்வரன் (வயது 52). ஜவுளி வியாபாரம் பார்த்து வந்த இவர், காதல் அழிவதில்லை படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக பல்வேறு நோய் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சையும் பெற்றார். ஆனாலும் நோயின் பிடியில் இருந்து அவர் விடுபடவில்லை. தொடர்ந்து ஜவுளி வியாபாரத்தையும் கவனிக்க முடியாமல் வீட்டில் முடங்கினார்.

இதற்கிடையே மதுரையை அடுத்த விரகனூரை அடுத்த ஐராவதநல்லூரில் மந்தையம்மன் கோவில் பின்புறமுள்ள ஒரு குடிசை வீட்டில் தனது தாயாருடன் வசித்து வந்த ஜெகதீஸ்வரன் இன்று காலை காலமானார். இதுபற்றிய தகவல் நடிகர் வடிவேலுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலமான ஜெகதீஸ்வரனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். மறைந்த ஜெகதீஸ்வரன் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாளை அவரது இறுதி சடங்கு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.