இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’. 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு சில மாநிலங்களில் வரி விலக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் மொத்தமாக ரூ.340 கோடியை வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து சமீபத்தில் 53-வது சர்வதேச கோவா திரைப்பட விழாவின் நிறைவு நாளில் பேசிய தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் திரையிடப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தின் இயக்குனரை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “பதானை தடை செய்ய நினைத்தார்கள் ஆனால் அதன் வசூல் ரூ.700 கோடியை தாண்டியுள்ளது. ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் முட்டாள்தனமான திரைப்படங்களில் ஒன்று. அதை தயாரித்தவர் யார் என்று எங்களுக்குத் தெரியும். படத்தை பார்த்த சர்வதேச ஜூரி இப்படத்தை விமர்சித்தார். இந்த சூழலில் அப்படத்தின் இயக்குனர், எனக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்கவில்லை எனக் கேள்வி கேட்கிறார். ஆஸ்கர் இல்லை, ஒரு பாஸ்கர் விருது கூட கிடைக்காது” என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பல நக்சல்ஸ்களுக்கு தூக்கமில்லாத இரவுகளை கொடுத்துள்ளது. பார்வையாளர்களை குரைக்கும் நாய் என்ற ஒருவர், படம் வெளியாகி ஓராண்டு கழித்தும் கஷ்டப்படுகிறார்” என பதிவிட்டுள்ளார்.