தூரமாக இருந்தாலும் பூமி முழுவதும் வெளிச்சம் கொடுக்கும் நிலவை சுற்றி நட்சத்திரங்கள் இருந்தால் சொல்லவா வேண்டும், அந்த இடமே பிரகாசத்தின் உச்சமாக தான் இருக்கும். அப்படி ஒரு நிகழ்வாக மிக சிறப்பாக நடைபெற்றது நடிகரும், தயாரிப்பாளருமான துரை சுதாகரின் மகள் நிலாவின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா.
‘களவாணி’ படம் மூலம் வில்லத்தனத்தில் வித்தியாசத்தை காட்டி பாராட்டு பெற்ற நடிகர் துரை சுதாகர், ‘பட்டத்து அரசன்’ படத்தில் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டின் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் சிறிய வேடம் என்றாலும் அதில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர், தற்போது பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பயணித்து வரும் துரை சுதாகரின் விருந்தோம்பல் பற்றி கோலிவுட்டே வியந்து பேசி வருகிறது.
சினிமா மீது உள்ள ஆர்வத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்தாலும், தன்னுடைய தஞ்சை மக்கள் மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் துரை சுதாகரின் வீட்டில் ஒரு நிகழ்ச்சி என்றால் ஒட்டு மொத்த பிரபலங்களும் அங்கு குவிந்துவிடுவது வழக்கம்.
அந்த வகையில், துரை சுதாகர் அவர்களின் இளைமகள் நிலாவின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் ஜூலை 21 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார், மேயர் சண்.ராமநாதன் மற்றும் நடிகர்கள் விமல், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி, இயக்குநர்கள் சற்குணம், கெவின் ஜோசப், அடைக்கலமாதா கல்லூரி நிறுவனர் டாக்டர்.அருணாச்சலம் உள்ளிட்ட பிரபல திரைப்பட கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டு குழந்தை நிலாவை வாழ்த்தினார்கள்.