நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதி கடிதம்
நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என குறிப்பிட்டிருந்தார்.
இதை பார்த்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கூறியிருப்பதாவது: உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.
சூர்யாவின் கருத்து நீதிமன்ற மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.