நடிகர் சூர்யாவுக்கு இயக்குநர் ஹரி வேண்டுகோள்
கொரானா வைரஸ் தொற்று எதிரொலியால் கடந்த நான்கு மாதங்களாக திரையரங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த பல படங்கள் வெளியீடு செய்ய முடியாமல் முடங்கியுள்ளன.
இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் தயாராகி நான்கு மாதங்களாக திரையிடப்பட முடியாததால், வரும் அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியீடுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை மூலமாக சூர்யா தெரிவித்திருந்தார். இதற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், திரைப்படத்துறையை சேர்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இயக்குநர் ஹரி சூர்யாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள்: ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. ஒடிடியில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைத்தட்டல்களால்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்து விட வேண்டாம். சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம்.
தெய்வம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால்தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரம். தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால், சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.