பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்யவில்லை. தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்று அவரது குடும்பம் குற்றம் சாட்டியது. மும்பை காவல்துறை இந்த வழக்கில் சரியாக செயல்படவில்லை. வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் கூறியது. சுஷாந்தின் தந்தை புகார் அடிப்படையில் பீகார் மாநில அரசு வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு விவகாரத்தில் மகாராஷ்டிர அரசுக்கும், பீகார் அரசுக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது. மேலும், சிபிஐ விசாரணை தேவை என கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதன்முறையாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அரசியல் குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இது ஒரு பெரிய விவகாரம் என நான் நினைக்கவில்லை. 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதுகுறித்து யாருமே பேசவில்லை என்று என்னிடம் விவசாயிகள் கூறினார்கள்.
நான் மகாராஷ்டிரா மற்றும் மும்பை போலீஸை கடந்த 50 வருடங்களாக பார்த்துள்ளேன். அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். மற்றவர்கள் குற்றம் சாட்டியதை பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. சிபிஐ அல்லது வேறு ஏஜென்சி இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் என்று யாராவது நினைத்தால் நான் அதை எதிர்க்க மாட்டேன்’’ என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் பேரனும், துணை முதல்-மந்திரி அஜித்பவாரின் மகனுமான பர்த் பவார் சமீபத்தில் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கை சந்தித்து சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதில் அளித்து சரத் பவார் ‘‘எனது பேரன் கூறிய கருத்துக்கு நான் எந்த வகையிலும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. இளைஞரான அவர் முதிர்ச்சியற்றவர்” என்றார்.