நடிகர் சுஷந்த் சிங்கின் வழக்கை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரி கொரோனா முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த தற்கொலை தொடர்பாக மும்பை, பாட்னா என இரண்டு இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்தின் காதலி உள்பட பலரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்த்தின் தந்தை கே.கே. சிங் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கை
தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்தார்.
இதையடுத்து, வழக்குதொடர்பான விசாரணைக்காக பாட்னா (சென்ட்ரல்) எஸ்.பி. வினேய் திவாரி தலைமையிலான சிறப்பு போலீஸ் குழுவினர் நேற்று மும்பை வந்தடைந்தது. இவர்கள் சுஷாந்த் வழக்கு தொடர்பான விசாரணையை உடனடியாக மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வெளிமாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா வருபவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக பீகார் மாநிலத்தில் இருந்து மும்பை வந்த பாட்னா எஸ்.பி. வினேய் திவாரியை பிரிஹான் மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.