நடிகர் சங்க கட்டிட பணிகள் முடங்கியது!
நாசர், விஷாலின் பாண்டவர் அணியும் பாக்யராஜ், ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதிய தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ந்தேதி நடத்தப்பட்டு கோர்ட்டு உத்தரவினால் 2 மாதங்களாக ஓட்டுகளை எண்ணாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடங்கி உள்ளன.
4 மாடியில் தயாராகும் நடிகர் சங்க கட்டிடத்துக்கு ஏற்கனவே ரூ.30 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளனர். தற்போது 4-வது மாடியில் மேற்கூரை அமைக்கும் பணியும் உள்பூச்சு மற்றும் உள் அலங்கார வேலைகளும் பாக்கி உள்ளன. இவற்றுக்கு மேலும் ரூ.15 கோடி வரை தேவைப்படும் என்கின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்று புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றதும் நட்சத்திர கலைவிழா நடத்தி கட்டிட பணிக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவோம் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. ஏற்கனவே வங்கி இருப்பில் இருந்த தொகை செலவாகி விட்டதால், கட்டிட பணியை தொடர பணம் இல்லை என்று நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் கட்டுமான வேலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மூத்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் சுமார் 600 பேருக்கு மாதம்தோறும் பென்சன் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு தொடர்ந்து வழங்க தற்போது பணம் இல்லை என்றும் கூறப்படுகிறது. நடிகர் சங்க தேர்தல் வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.