தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை அறிவித்துள்ளது சட்டவிரோதமானது என்றும், சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் நடிகர் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்தும், தேர்தலை நடத்த பாதுகாப்பு கோரியும் பொதுச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்குகளில் பதிவாளர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், தேர்தலை நடத்தவும் அனுமதித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டது. அதன்படி, திட்டமிட்ட தேதியான 2019, ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், வாக்குப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 2 ஆயிரத்து 500 வாக்குகள் பதிவாகின. அதில் 1,150 வாக்குகள் தபால் மூலம் பதிவாகின. நடிகர் சங்க தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசம் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த வழக்கில் நீதி மன்ற உத்தரவுபடி இன்று 20ம் தேதி நுங்கம்பாக்கம் குட் ஷெப்பர்டு பள்ளியில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பெட்டிகளில் உள்ள வாக்கு எண்ணும் போது பதிவான வாக்குகளைவிட ஐந்து வாக்கு சீட்டுகள் அதிகமாக இருப்பதாகக் கூறி ஐசரி கணேஷ் அதிருப்தி தெரிவிக்கவே வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
இது குறித்து சங்கரதாஸ் அணியின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஐசரி கணேஷ் கூறியதாது, இரு அணிகளில் எந்த அணி வந்தாலும் ஓகே, ஆனால் பதிவான மொத்த வாக்குகள் எத்தனை என்பதை அவர்கள் சொல்ல தாமதமானது. மொத்தம் பதிவான வாக்குகள் 1602, எல்லா பெட்டிகளையும் திறந்த அதிகாரிகள் ஒரு பெட்டியை மட்டும் திறக்க தாமதம் செய்தார்கள். கேட்டால் சாவி தொலைந்து விட்டது என்றார்கள். அதில்தான் எல்லா ரெகார்டுகளும் இருகின்றன. பிறகு பதிவான வாக்குகள் குறித்து அறிவிக்கப்பட்டது. பல பதவிகளுக்கு பதிவான வாக்குகள் 7,8 என்று அதிகமாக இருக்கின்றன, எப்படி அதிகமாகும். எது எப்படியோ இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்தே ஆகவேண்டும். அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம் என்றார்.