X

நடிகர் சங்கம் தேர்தல் – விஷாலுக்கு எதிராக ஐசரி கணேஷ் போட்டி

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் 23-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

நடிகர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக அன்றைய தினம் படப்பிடிப்பை ரத்து செய்யக் கோரி அனைத்து சங்கங்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். மேலும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.கே.சுரேஷ் பல்வேறு சமயங்களில் விஷால் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியதை தொடர்ந்து அவர் விஷாலுக்கு எதிராக களமிறங்குவார் என்று வதந்திகள் பரவின. இதை ஆர்.கே.சுரேஷ் மறுத்துள்ளார்.

அதேசமயம் விஷாலுக்கு எதிராக தங்கள் அணியின் சார்பில் ஐசரி கணேஷ் போட்டியிட உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஐசரி கணேஷ் பொதுச்செயலாளர் பதவிக்கும், நடிகர் உதயா துணைத்தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். இந்த அணி சார்பில் போட்டியிட மேலும் சில நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.