Tamilசினிமா

நடிகர் கார்த்தியின் பாராட்டு – நெகிழ்ச்சியடைந்த நடிகர் கவின்

கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் ‘டாடா’. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் தங்களின் பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு டாடா படத்தை பார்த்த தனுஷ், கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி இப்படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இணையப்பக்கத்தில், “இறுதியாக ‘டாடா’ படத்தைப் பார்த்துவிட்டேன். என்ன ஒரு அற்புதமான படம். சிறப்பான எழுத்து மற்றும் படத்தின் உருவாக்கத்தைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கவின் முழுமையான அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். உங்களைக்கண்டு பெருமைப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் கவின், “அது ஒரு ஐந்து நிமிட போன் கால். நீங்கள் என்னிடம் சொன்ன எல்லாவற்றிலும், ‘இந்தப் படத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்’ என சொன்னதை மட்டும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.