நடிகர் அமிதாப் பச்சனுக்கு ரூ.10 அபராதம் விதிக்க வேண்டும் – சிஏஐடி நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் புகார்
ஆன்லைன் வணிகத் தளமான பிளிப்கார்ட் ஒவ்வொரு ஆண்டும் ‘பிக் பில்லியன்டே’ என்ற நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகிறது. அதுபோன்று இந்த ஆண்டும் ‘பிக் பில்லியன்டே’ விற்பனைக்காக விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
அதில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடித்துள்ளார். இந்த விளம்பரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அந்த விளம்பரத்தில் பிளிப்கார்ட்டில் தருவது போன்ற சலுகை சில்லறை விற்பனைக் கடைகளில் நிச்சயம் கிடைக்காது என்று அமிதாப் பச்சன் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நுகர்வோரை தவறாக வழி நடத்தும் இந்த விளம்பரத்தை தடை செய்யவும், பிளிப்கார்ட்டுக்கு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் புகாரளித்துள்ளது.
மேலும் “ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு தொழில்கள் பாதித்துள்ள நிலையில், அமிதாப் பச்சன் இதுபோன்ற விளம்பரத்தில் நடிப்பதால், எங்களுக்கு மேலும் நஷ்டம் ஏற்படும். ஆகவே இந்த விளம்பரத்தை தடை செய்து, அபராதம் விதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.