Tamilசினிமா

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அமீரகம்

அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.

இந்நிலையில், பிரபல மலையாள நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு 10 ஆண்டுக்கான கோல்டன் விசா நேற்று வழங்கப்பட்டது. இதற்காக அபுதாபி பொருளாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த துறையின் தலைவர் முகம்மது அலி அல் சோரபா அல் ஹம்மாதி இருவருக்கும் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்தார்.

அமீரக அரசிடம் இருந்து தென்னிந்திய நடிகர்கள் கோல்டன் விசா பெறுவது இதுவே முதன்முறை. இதற்கு முன்னதாக பாலிவுட் நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகிய இந்திய பிரபலங்கள் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.