X

நடிகர்களை பார்க்க மக்கள் கூடுவார்கள், ஆனால் அது ஒட்டுக்களாக மாறுவதில்லை – முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பேட்டி

பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பா.ஜனதா ஆட்சியில் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. வளர்ச்சி பணிகள் செய்திருந்தால் தான் சட்டசபை தேர்தலில், தங்களது ஆட்சியில் செய்த பணிகள் குறித்து மக்களிடம் கூறி பிரசாரம் செய்ய முடியும். அதனால் பிரசாரத்திற்காக நடிகர்கள், நட்சத்திர பேச்சாளர்களை பா.ஜனதாவினர் அழைத்து வருகின்றனர்.

நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது, அவரது தனிப்பட்ட விஷயமாகும். இதற்காக நடிகர்கள் பற்றி நான் கீழ்மட்டமாக பேச விரும்பவில்லை. நடிகர்கள் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்ப கூடியவர்கள். அவர்களை ஒரு கட்சிக்கு மட்டும் தேவைப்படுவராக மாற்றக்கூடாது.

சினிமா நடிகர்களை பார்க்க மக்கள் கூடுவார்கள், ஆனால் அது ஓட்டுக்களாக மாறுவதில்லை. நடிகர்களை பார்க்க வரும் மக்கள், அந்த கட்சிக்கு தான் ஓட்டுப்போடுவார்கள் என்று சொல்ல முடியாது. ஜனதாதளம் (எஸ்) கட்சியை பொறுத்தவரை நானும், தேவகவுடாவும் நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை. எங்கள் கட்சியில் இருக்கும் அனைத்து தொண்டர்களும் நட்சத்திர பேச்சாளர்கள் தான். அதற்கான திறமை எங்களது கட்சி தொண்டர்களிடம் இருக்கிறது.

பஞ்சரத்னா யாத்திரைக்கு மக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சட்டசபை தேர்தலை சந்திக்க எங்கள் கட்சி பஞ்சரத்னா திட்டங்களை கொண்டுள்ளது. அந்த திட்டங்களை மக்களிடம் கூறி பிரசாரம் செய்வோம். எங்கள் கட்சிக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை அழைத்து வருவது குறித்து இன்னும் முடிவாகவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.