நடராஜர் கோவில் நகைகள் சரிபார்க்கும் பணி தொடங்கியது
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் பிரசித்திபெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா விதிமுறைகளை காரணம் காட்டி சித்சபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் கோர்ட்டு உத்தரவுபடி சித்சபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இதற்கு பொது தீட்சிதர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே கோவிலில் உள்ள சொத்துக்கள், நகைகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு இந்து சமய அறநிலைதுறை சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தனர். ஆனால் கோவில் தீட்சிதர்கள் இந்த ஆய்வு கோர்ட்டு விதிகளுக்கு எதிரானது என்று கூறி ஆவணங்களை கொடுக்க மறுத்துவிட்டனர். எனவே அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதனிடையே நடராஜர் கோவில் குறித்து பொதுமக்கள் நேரடியாகவும், இனையதளம் மூலமாகவும் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அறிவித்திருந்தார். அதன்படி கடலூரில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் மனு கொடுத்தனர்.
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகைகள், சொத்துக்களை ஆய்வு செய்ய குழு அமைத்தது. அதன்படி இந்த குழுவில் இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர்கள் ஜோதி (கடலூர்), குமரேசன் (திருவண்ணாமலை), சிவலிங்கம் (விழுப்புரம்), நகை மதிப்பீட்டு வல்லுனர்கள் தர்மராஜன் (திருச்சி), குமார் (திருவண்ணாமலை), குருமூர்த்தி (விழுப்புரம்) ஆகிய 6 பேர் இடம் பெற்றிருந்தனர். ஆய்வு செய்யும் விபரம் குறித்து ஏற்கனவே கோவிலில் உளள தீட்சிதர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்படி 6 பேர் கொண்ட குழுவினர் இன்று (22-ந் தேதி) ஆய்வு செய்வதாக அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து திட்டமிட்டபடி இந்த குழுவினர் இன்று காலை 10.30 மணி அளவில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர். அப்போது பொது தீட்சிதர்கள் அலுவலக அறையில் அதிகாரிகளுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் 21 படிக்கு அருகே உள்ள இடத்தில் தீட்சிதர்கள் ஏற்பாடு செய்திருந்த இடத்தில் கோவில் நகைகள் ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. அப்போது வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதையொட்டி கோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.