Tamilசினிமா

நடனம் மற்றும் நகைச்சுவைக்காக அதிகம் மெனக்கெட்டிருகிறேன் – சபா நாயகன் படம் பற்றி நடிகர் அசோக் செல்வன்

அறிமுக இயக்குநர் சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், certified rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். இப்படம் டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் நாயகன் அசோக் செல்வன் பேசும் போது, “சபாநாயகன் ஜாலியான க்ளீனான எண்டர்டெயினர் திரைப்படம். நடனம் மற்றும் நகைச்சுவைக்காக இப்படத்தில் நான் நிறையவே மெனக்கெட்டிருக்கிறேன். நான் இவ்வளவு ஹியூமர் செய்வேனா என்று மதன் சார் என்னிடம் ஆச்சரியப்பட்டார். முன்பே எனக்கு நக்கலைட்ஸ் சேனல் மிகவும் பிடிக்கும். லியோன் ஓ மை கடவுளே படத்தில் மிகச்சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார். இப்படத்திலும் கேட்டதும் பிடிக்கும்படியான பாடல்கள் உள்ளன. மூன்று நாயகிகளுடன் நெருக்கமாக நடித்தது பற்றி கேட்கிறீர்கள். நெருக்கத்தில் என்ன கேப் இருக்க முடியும் சார். என் மனைவி கீர்த்தி அந்த மாதிரி எதுவும் தவறாக நினைக்கமாட்டார். முதல் காதல், பள்ளிகால வாழ்க்கை, போன்ற மறக்கமுடியாத நினைவுகள் நம் மனங்களில் அழியாமல் எப்போதும் இருக்கிறது. அவைகளை கிளறிவிடும் திரைப்படமாக சபாநாயகன் இருக்கும்” என்றார்.