நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி கடந்த 10 நாட்களாக நடந்து வந்த தீவிர தேர்தல் பிரசாரம் நாளை மறுநாள் மாலையுடன் நிறைவு பெற உள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 2 நாட்களே அவகாசம் இருப்பதால் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த தடவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 8 முனை போட்டி நிலவுகிறது.
தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. ஆகிய 8 கட்சிகள் போட்டி காரணமாக ஒவ்வொரு வார்டிலும் கணிசமான அளவுக்கு வாக்குகள் சிதறும் நிலை உள்ளது. இதற்கிடையே சில வார்டுகளில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்களும் வாக்குகளை பிரிக்க உள்ளனர்.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் அதிருப்தி வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர். இவர்களின் போட்டி காரணமாக கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பில் இழுபறி ஏற்பட்டு உள்ளது.
மேலும் பல இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனர். அவர்களும் கணிசமாக வாக்குகளை பிரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பல வார்டுகளில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று கணிக்க முடியாதபடி உள்ளது.
இதையடுத்து வெற்றி கனியை பறிப்பதற்காக கட்சி வேட்பாளர்களும், சில இடங்களில் சுயேட்சைகளும் வாக்காளர்களை கவரும் கடைசி கட்ட முயற்சியை கையில் எடுத்து உள்ளனர். வழக்கமாக தேர்தலுக்கு தேர்தல் வழங்கப்படும் பணப்பட்டுவாடா இந்த தடவை நேற்று முதல் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்பதை கணக்கிட்டு பணம்கொடுக்க தொடங்கி உள்ளனர்.
சுயேட்சை வேட்பாளர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு பணத்தை கொடுக்கிறார்கள். சில சுயேட்சைகள் ரூ.1000, ரூ.2 ஆயிரம் என வழங்குகிறார்கள். குடிசை பகுதி மக்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா நடப்பது தெரிய வந்துள்ளது.
சுயேட்சைகளின் இந்த நடவடிக்கையை மிஞ்சுவதற்காக அரசியல் கட்சி வேட்பாளர்கள் பணத்தை தண்ணீராக வாரி இறைக்க தொடங்கி விட்டனர். ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கட்சி வேட்பாளர்கள் கொடுத்து வருகிறார்கள். சில இடங்களில் முதல் தவணை என்று கொஞ்சம் பணம் கொடுக்கும் வேலையும் நடக்கிறது.
பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மாநில தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்து உள்ளது. சென்னையில் பறக்கும் படை அதிகாரிகள் போலீஸ் மற்றும் கேமிரா குழுவினருடன் வலம் வருகிறார்கள். இதனால் பல இடங்களில் அரசியல் கட்சி வேட்பாளர்களால் பணப்பட்டுவாடா செய்ய முடியவில்லை.
பணம் கொடுத்தால் கையும் களவுமாக பிடித்து விடுகிறார்கள் என்பதால் நூதனமான முறையில் வாக்காளர்களை கவரும் நடைமுறையும் இந்த தடவை கையாளப்படுகிறது. தேர்தல் அதிகாரிகள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு புதிய வழிகளில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.
மூக்குத்தி, குக்கர், அரிசி மூட்டை, புடவை, மளிகை பொருட்கள் என விதவிதமாக வாக்காளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. சில இடங்களில் பரிசு கூப்பனும் கொடுக்கிறார்கள். சென்னை செம்பாக்கம், மாடம்பாக்கம் பகுதிகளில் கூரியர் மூலம் பரிசு கூப்பன்கள் வீடுகளுக்கு வந்து உள்ளன.
தேர்தல் முடிந்த பிறகு இந்த பரிசு கூப்பன்களை பயன்படுத்தி மளிகை பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பரிசு கூப்பன்கள் ரூ.1000 முதல் ரூ.1,500 வரை மதிப்புடையதாக இருக்கிறது.
சில பகுதிகளில் வேட்பாளர்கள் இன்னும் வித்தியாசமாக பணப்பட்டு வாடா செய்கிறார்கள். குடியிருப்பு சங்க நிர்வாகிகளை சந்தித்து மொத்தமாக பேசி பணத்தை பட்டுவாடா செய்கிறார்கள். அந்த வகையில் பல்வேறு குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் லட்சக்கணக்கில் பணத்தை வேட்பாளர்களிடம் இருந்து கறந்துள்ளனர்.
வேட்பாளர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏறி இறங்க வேண்டாம். நாங்களே ஆதரவு திரட்டி வருகிறோம் என்று குடியிருப்பு சங்க நிர்வாகிகள் வாக்குறுதி கொடுத்து பணம் பெறுவதாக தெரியவந்துள்ளது. சிட்லப்பாக்கம் உள்பட சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இப்படி பணம் கைமாறி உள்ளது.
டிஜிட்டல் பணப்பரிமாற்றமும் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாக்காளர்களின் செல்போன் நம்பர்களை கேட்டு பெற்று அதன்மூலம் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 10 நாட்களாக சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் இந்த டிஜிட்டல் பணப்பரிமாற்றம் ஓசையின்றி நடைபெற்று வருகிறது.
மாநில தேர்தல் ஆணையத்தால் இந்த ஆன்லைன் பணபரிமாற்றத்தை தடுக்க இயலாத நிலை உள்ளது. 10-க்கும் மேற்பட்ட ஓட்டுகள் ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீட்டுக்கு முதன்மையாக இருப்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணப்பரிமாற்றம் செய்கிறார்கள்.
சில இடங்களில் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் பூத் சிலிப் கொடுப்பதாக கூறி அதனுடன் பரிசு பொருட்களையும், பணத்தையும் சேர்த்து கொடுக்கிறார்கள். வேளச்சேரியில் நேற்று இத்தகைய பணப்பட்டுவாடா நடந்ததை காண முடிந்தது.
பறக்கும் படையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டாலும் பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்க இயலவில்லை. சில பகுதிகளில் மளிகை பொருட்களை வாங்கி கொடுக்கிறார்கள்.
அந்த மளிகை பொருட்களை வாங்க மறுப்பவர்களின் வீடுகள் முன்பு அதை வைத்து விட்டு சென்று விடுகிறார்கள். தாம்பரம், ஆவடி பகுதிகளில் இப்படி மளிகை பொருட்களை வாங்கி கொடுக்கும் கலாச்சாரம் அதிகமாக உள்ளது.
தேர்தலுக்கு பிறகு பணப்பட்டுவாடா செய்யப்படும் என்று சில வார்டுகளில் வேட்பாளர்கள் உறுதி கொடுக்கிறார்கள். உடனடியாக குறிப்பிட்ட வடிவமைப்புடன் கூடிய துண்டு டோக்கனாக வழங்கப்படுகிறது.
சில இடங்களில் வித்தியாசமான பிளாஸ்டிக் டோக்கன்கள் கொடுக்கப்படுகிறது. அந்த டோக்கன்களை காண்பித்து மளிகை பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆசை காட்டுகிறார்கள்.
சென்னை உள்பட அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் பணப்பட்டுவாடா வினியோகம் நாளையும், நாளை மறுநாளும் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.