Tamilசெய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் – திமுக தலைவர் பேச்சு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

இதற்கான தேர்தல் தேதி அட்டவணை பொங்கல் பண்டிகைக்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்பதில் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் தீவிரமாக உள்ளன. எல்லா கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வுக்காக ஆய்வை தொடங்கி உள்ளன. ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நேற்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முக்கிய விவாதங்கள் நடத்தப்பட்டன.

கூட்டத்தில் பேசிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. நிர்வாகிகள் அனைவருக்கும் சில உத்தரவுகளை பிறப்பித்து பேசினார். அப்போது அவர், ‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். அதற்காக தி.மு.க.நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கடுமையாக பாடுபட வேண்டும்.

100 சதவீத வெற்றி இலக்கை கருத்தில் கொண்டு இப்போதே தேர்தல் பணிகளை தொடங்குங்கள். ஒவ்வொரு பகுதியிலும் பூத் கமிட்டியை உடனடியாக ஏற்படுத்துங்கள்’’ என்றார்.

மு.க.ஸ்டாலின் மேலும் கூறுகையில், ‘‘தி.மு.க.வை அடிமட்டம் வரை வலுப்படுத்த புது உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘‘தி.மு.க.வுக்கு அதிகப்படியான இளைஞர்களையும், இளம் பெண்களையும் புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். இதுவரை தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது. நகர்ப்புற தேர்தலிலும் தி.மு.க.வே வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்.

ஆனால் வெற்றியை பாதிக்கும் வகையில் எந்தவொரு வி‌ஷயத்துக்கும் நீங்கள் இடம் கொடுத்து விடக்கூடாது. அதற்கேற்ப இப்போதே உங்களது பணிகளை தொடங்குங்கள். கட்சியை ஒவ்வொரு மட்டத்திலும் வலுப்படுத்துங்கள்.

ஒவ்வொரு தொகுதியிலும் 30 சதவீத வாக்காளர்கள் தி.மு.க. உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அதற்காக திட்டமிட்டு உழையுங்கள். ஒவ்வொரு தொகுதியிலும் 25 ஆயிரம் புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும்.

இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் 25 ஆயிரம் புதிய உறுப்பினர்களை நாம் சேர்த்துவிட்டால், தமிழகம் முழுவதும் 60 லட்சம் புதிய உறுப்பினர்களை நாம் உருவாக்கிவிட முடியம். புதிய உறுப்பினர்களாக சேர்பவர்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகம் இடம்பெற வேண்டும்’’ என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.