X

நகராட்சி நிர்வாக பணிகளால் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது – தமிழக அரசு பெருமிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே, 6 மாநகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மேலும், காரைக்குடி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக உயர்த்தப்படும் என அண்மையில் அறிவித்துள்ளார். இப்படி நகர்ப்புற வசதிகள் வளரவளர, நகராட்சி நிர்வாகமும் மேலும் மேலும் வளர்ச்சி பெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வசதிகளைப் பெருக்குவதில் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திட ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் “கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தைப் புதிதாக உருவாக்கியுள்ளார்.

நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் இதுவரை 2,04,860 பேர்களுக்கு வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 11 மாநகராட்சிகளில் சீர்மிகு நகரத்திட்டம் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு ரூ.5500 கோடி ஒன்றிய அரசின் பங்களிப்பு ரூ.5390 கோடி மொத்தம் ரூ.10,890 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

சேதமடைந்த சாலைகளில் 9,346 கி.மீ. சாலைகள் நடப்புத் திட்டங்களின் கீழ் சீரமைக்கவும் மீதமுள்ள 2,526 கி.மீ நீளமுள்ள சேதமடைந்த சாலைகள் அரசின் சிறப்பு நிதி ரூ.1,000 கோடியில் 2022-2023 முதல் 2025-2026 வரை நான்கு ஆண்டுகளில் பணி முடிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை புற நகர்ப்பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி மற்றும் மாங்காடு, குன்றத்தூர் மற்றும் திருவேற்காடு நகராட்சிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு 30.31 கி.மீ நீளத்திற்கு ரூ.82.15 கோடி மதிப்பீட்டில் 21 மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம் கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, பொன்னேரி மற்றும் திருவேற்காடு நகராட்சிகளில் 69.56 கி.மீ நீளத்திற்கு ரூ.145.24 கோடி மதிப்பீட்டில் 53 மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தூத்துக்குடி பகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி 2022-2023ம் திட்டத்தின் கீழ் ரூ.42.55 கோடி மதிப்பீட்டில் 43.094 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொசஸ்தலை ஆறு மற்றும் சென்னையைச் சுற்றி நடைபெறும் பணிகள் உட்பட ரூ.6,778 கோடி மதிப்பீட்டில் 2,641 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டும், மேலும், 669 கி.மீ. நீளப் பணிகள் நடைபெறுகின்றன. 8,911 கோடி மதிப்பீட்டில் 28 பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. 858 கோடி மதிப்பீட்டில் 7.42 இலட்சம் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

1,200 கோடி மதிப்பீட்டில் 55 பேருந்து நிலையப் பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் 100 பேருந்து நிலையப் பணிகள் நடைபெறுகின்றன. 690 கோடி மதிப்பீட்டில் 62 சந்தைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 86 இடங்களில் சந்தைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. 100 அறிவுசார் மையங்கள் நகராட்சி மாநகராட்சியால் தொடக்கப்பட்டுள்ளன. ரூ.424 கோடி மதிப்பீட்டில் 681 பூங்கா அபிவிருத்திப் பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் 396 பூங்கா மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.700 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, கரைகளைப் பலப்படுத்தப்படுத்திச் சீரமைக்கப்பட்டடுள்ளன. ரூ.373 கோடி மதிப்பீட்டில் புதிய மின் மயானங்கள் நிறுவும் பணிகளும் நவீனப்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன. ரூ.153 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான அலுவலகக் கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன. திறந்த வெளியில் மலம் கழித்தலை அகற்றிட ரூ.152 கோடி மதிப்பீட்டில் 72,214 தனி நபர் கழிவறைகளும் 2,081 சமுதாயக் கழிப்பிடங்களும் கட்டி முடிக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.

1405 பேருக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 2,500 பேரை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு வைத்து யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ, அவர்களைப் பணிக்கு எடுத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டு; அதன்படித் தேர்வுகள் நடைபெற்றுள்ளன. தேர்வுத் தாள்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் 2,500 பேருடன் மேலும் 3,000 பேரும் தேர்வு செய்யப்பட்டு நகராட்சிகளில் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், புதுமையான திட்டங்களினால் பல்வேறு பெருமைகளைப் பெற்று நகராட்சி நிர்வாகத்துறையின் பணிகளால் நகர மயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.