தோல்வி மூலம் நன்றாக பாடம் கற்றுக்கொண்டோம் – கே.எல்.ராகுல் கருத்து

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது.

பார்ல் நகரில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்தது.

ரிஷப்பண்ட் 71 பந்தில் 85 ரன்னும் (10 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் லோகேஷ் ராகுல் 55 ரன்னும், ஷர்துல் தாகூர் 38 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர்.

பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க வீரர்களான மலான் 91 ரன்னும், குயின்டன் டிகாக் 66 பந்தில் 78 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே முதல் ஆட்டத்தில் அந்த அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது-. இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்திருந்தது. தற்போது ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது.

இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் தற்காலிக கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

தென் ஆப்பிரிக்க அணி அதன் சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவர்கள் உள்ளூரில் நன்றாக ஆடினார்கள் என்று நினைக்கிறேன். மிடில் ஓவரில் நாங்கள் தவறு செய்தோம்.

தென் ஆப்பிரிக்காவிடம் ஏற்பட்ட தோல்வி மூலம் நாங்கள் நன்றாக பாடம் கற்றுக்கொண்டோம். முதல் போட்டியில் தவானும், விராட் கோலியும் நன்றாக ஆடினார்கள். 2-வது போட்டியில் ரிஷப்பண்ட் சிறப்பாக ஆடினார். ஷர்துல் தாகூர் எங்கள் அணிக்கு முக்கியமானவர்.

3-வது ஒருநாள் போட்டியில் நாங்கள் வெற்றிபெற கடுமையாக போராடுவோம். வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம்.

இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுன் நகரில் நாளை நடக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools