தோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று தொடங்கியது. அபுதாபியில் நடந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. சவுரப் திவாரி 31 பந்தில் 42 ரன்னும் ( 3 பவுண்டரி, 1 சிக்சர்), குயின்டன் டி காக் 20 பந்தில் 33 ரன்னும் ( 5 பவுண்டரி) எடுத்தனர்.
நிகிடி 3 விக்கெட்டும், ஜடேஜா, தீபக் சாஹர் தலா 2 விக்கெட்டும், பியூஸ் சாவ்லா, சாம் கரண் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 4 பந்து எஞ்சியிருந்த நிலையில் 163 ரன் இலக்கை எடுத்தது. சி.எஸ்.கே. அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அம்பதி ராயுடு 48 பந்தில் 71 ரன்னும் (6 பவுண்டரி 3 சிக்சர்), டுபெலிசிஸ் 44 பந்தில் 58 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர். இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 84 பந்தில் 115 ரன் எடுத்தது முக்கிய அம்சமாகும்.
போல்ட், பேட்டின்சன், பும்ரா, குணால் பாண்ட்யா, ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் 4 முறை மும்பை இந்தியன்சிடம் தோற்றதற்கு சரியான பதிலடி கொடுத்தது.
இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி கூறியதாவது:-
எங்களது ஆட்டத்தில் பல இடங்களில் முன்னேற்றம் தேவை. முதல் போட்டி இதை உணர்த்தியது. இந்த போட்டி மூலம் வீரர்கள் பல விஷயங்களை உணர்ந்து இருப்பார்கள். ஆடுகளத்தின் தன்மை உள்பட பல்வேறு விஷயங்களை முதல் போட்டியிலேயே அறிந்து கொள்ள முடியாது.
பேட்டிங்கில் தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்தது. நாம் முன்னேற்ற பாதையில் இருக்க வேண்டும் என்றால் இது மாதிரியான நிகழ்வு இருக்கக்கூடாது. இதை வீரர்கள் கற்றுக்கொண்டிருப்பார்கள்.
அம்பதி ராயுடு, டுபெலிசிசுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இருவரையும் பாராட்டுகிறேன். எங்கள் அணியில் சர்வதேச போட்டியில் ஓய்வுபெற்ற வீரர்கள் அதிகமாக உள்ளனர். நல்ல வேளையாக அவர்களுக்கு காயம் ஏற்பட வில்லை.
அனுபவம் பலன் அளிக்கக்கூடியது. ஒவ்வொருவரும் அதைப்பற்றிதான் பேசுகிறார்கள். 300 ஒருநாள் போட்டியில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும். 11 பேர் கொண்ட அணி அனுபவமும், இளமையும் இணைந்ததாக இருக்க வேண்டும். இந்த கலவையால் தான் சிறப்பாக ஆட முடியும்.
இளம் வீரர்களுக்கு களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அனுபவ வீரர்களின் ஆலோசனை தேவை. ஐ.பி.எல். போட்டியில் 60 முதல் 70 நாட்கள் சீனியர் வீரர்களுடன் இளம் வீரர்கள் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித்சர்மா கூறும்போது, ‘‘நாங்கள் போதுமான அளவுக்கு ரன்களை எடுக்கவில்லை. சி.எஸ்.கே. வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள்’’ என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 22-ந்தேதி சார்ஜா வில் சந்திக்கிறது.
மும்பை அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 23-ந்தேதி அபுதாபியுல் எதிர் கொள்கிறது.