ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி கொல்கத்தாவிடம் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது. சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தாவுக்கு 145 ரன் இலக்காக இருந்தது. ஷிவம் துபே 34 பந்தில் 48 ரன்னும் ( 1 பவுண்டரி, 3 சிக்சர்), கான்வே 28 பந்தில் 30 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி , சுனில் நரைன் தலா 2 விக்கெட்டும், வைபவ் அரோரா , ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. கேப்டன் நிதிஷ் ரானா 44 பந்தில் 57 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) , ரிங்குசிங் 43 பந்தில் 54 ரன்னும் ( 4 பவுண்டரி , 3 சிக்சர்) எடுத்தனர்.
தீபக் சாஹர் 3 விக்கெட் கைப்பற்றினார். சி.எஸ்.கே. சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். இந்த தோல்வியால் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யாமல் அதை நெருங்கிய நிலையிலேயே நிற்கிறது. இந்த தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-
2-வது இன்னிங்சில் முதல் பந்தை வீசிய போதே இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற முடியும் என்று தெரிந்து விட்டது. ஆனால் இந்த பிட்சில் முதலில் 180 ரன்கள் எடுத்து இருக்க முடியாது. 2-வது இன்னிங்சில் பனியின் தாக்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
மேலும் நாங்கள் முதல் ஆடிய போது ஆடுகளம் சுழற்பந்து வீரர்களுக்கு சாதகமாக இருந்தது. தோல்விக்கு பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் என யார் மீதும் குறை சொல்ல முடியாது. நிலைமைகள் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஷிவம் துபே மிகவும் சிறப்பாக ஆடுகிறார். அவர் தன்னுடைய செயல்பாட்டில் எப்போதுமே திருப்திபட்டுக் கொண்டதில்லை. அதனால் தான் தொடர்ந்து மெருகேறிக் கொண்டே இருக்கிறார்.
தீபக் சாஹர் பந்தை நன்றாக சுவிங் செய்தார். பீல்டிங்குக்கு ஏற்ற வகையில் பந்து வீசும் திறமை அவரிடம் அதிகமாகவே இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
சி.எஸ்.கே. அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு டெல்லியில் சந்திக்கிறது. 15 புள்ளியுடன் இருக்கும் சென்னை அணி இதில் வெற்றி பெற்றால் முதல் 2 இடங்களுக்குள் வர முடியும். தோற்றால் மற்ற அணிகளின் முடிவை பொறுத்து பிளேஆப் நிலை இருக்கும். இதனால் வெற்றி பெறுவது அவசியமானதாகும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6-வது வெற்றியை பெற்று 12 புள்ளியுடன் இருக்கிறது அந்த அணி முழுமையாக வெளியேற முடியாத நிலையில் உள்ளது. கொல்கத்தா கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் லக்னோவை 20-ந் தேதி எதிர் கொள்கிறது.