ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் மீண்டும் தோற்கடித்தது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது.
தொடக்க வீரர் சுப்மன் ஹில் 39 பந்தில் 65 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), ஆந்த்ரே ரஸ்சல் 21 பந்தில் 45 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். மோரிஸ், ரபடா, கீமோபவுல் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் தவானின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 63 பந்தில் 97 ரன்னும் (11 பவுண்டரி, 2 சிக்சர்), ரிசப்பந்த் 31 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
கொல்கத்தாவை டெல்லி அணி 2 முறையாக தோற்கடித்தது. இந்த வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் ஷிரேயாஸ் அய்யர் கூறியதாவது:-
இந்த வெற்றி மிகுந்த மகிழச்சியை அளிக்கிறது. இதை அற்புதமாக உணர்கிறேன். ஒவ்வொரு வீரரும் மிகவும் அபாரமாக செயல்பட்டார்கள். மும்பைக்கு எதிராக ஆடியது போல நன்றாக விளையாடினோம்.
தவான் ஆட்டம் அற்புதமாக இருந்தது. முன்கள வீரர்கள் பொறுப்புடன் செயல்பட்டு ஆடியது சிறப்பானது.
கொல்கத்தா அணி 3-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
எங்களது பேட்டிங் சிறப்பாக இல்லை. ஆனாலும் 10 முதல் 15 ரன்வரை கூடுதலாக எடுத்ததாக கருதுகிறேன். பந்து வீச்சாளர்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தேன். ஆனால் பவுலர்கள் நேர்த்தியாக பந்து வீசவில்லை. ஏமாற்றம் அடைய செய்து விட்டனர்.
இனி வரும் ஆட்டங்களில் நாங்கள் வலிமையுடன் முன்னேறுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டெல்லி அணி 8-வது ஆட்டத்தில் ஐதராபாத்தை நாளை சந்திக்கிறது. கொல்கத்தா அணி சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.