உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்ததன் விளைவாக வங்காள தேசம் சமீபத்திய மாதங்களில் பெரும் மின் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், வங்காள தேசத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக சுமார் 13 கோடி பேர் மின்சாரம் இன்றி தவித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் தடை ஏற்பட்டதாகவும், 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முக்கிய ஆடைத் துறை மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை சுமார் 10 மணி நேரம் நிறுத்தியது தொடர்பாக வங்காளதேச அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்வினியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படாததால் எப்போதும் பிரகாசமாக ஒளிரும் டாக்கா நகர வீதிகள் மற்றும் பிற இடங்கள் இருளில் மூழ்கின. கடைகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்தும், செல்போன் டார்ச் மூலமும் உரிமையாளர்கள் பொருட்களை விற்பனை செய்தனர். பல மணி நேரமாக மின்இணைப்பு இல்லாமல் போனதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் பல பகுதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும், நேற்று காலையில்தான் முழு அளவில் மின் இணைப்பு வந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.