திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள மதுரா அப்பார்ட்மெண்டல் வசித்து வந்தவர் பிரபு என்கிற ஆம்புலன்ஸ் பிரபாகரன் (வயது 51). முன்னாள் மாவட்ட பா.ம.க. ஆம்புலன்ஸ் தொழிற்சங்க செயலாளரான இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் மற்றும் ஹோம் கேர் நிறுவனம் நடத்தி வந்தார்.
நேற்று இரவு 9.20 மணியளவில் புத்தூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனது அலுவலகத்தில் தனியாக இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த முகமூடி அணிந்த 4 பேர் கும்பல் அலுவலகத்துக்குள் திபுதிபுவென புகுந்தனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அங்கு இருந்த பிரபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
பிரபுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே கொலையாளிகள் அங்கிருந்து 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர். தகவல் அறிந்த திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் பிரபுவின் அலுவலகத்தில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளின் விவரங்களை சேகரித்தனர். இதை தொடர்ந்து செல்போன் டவர் மூலமாக நள்ளிரவில் போலீசார் கொலையாளிகள் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்தனர்.
பின்னர் கே.கே. நகரில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிடிபட்ட நபர்கள் மூலமாக தப்பி ஓடிய நபரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பிரபு மீது கொலை முயற்சி, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்விரோதம் காரணமாக அவர் கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பிரபுவை தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது கண்காணிப்பு வளையத்தில் தொடர்ந்து இருந்து வந்தார். நாளை அவர் போலீசில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்ட பிரபுவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்த பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.