உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முகேஷ் அம்பானிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மும்பை கிர்காவ் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் ஆஸ்பத்திரிக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து 3, 4 முறை போன் செய்தார்.
அவர், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். இதுகுறித்து உடனடியாக மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ரிலையன்ஸ் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து மிரட்டியவரின் செல்போன் எண்ணை வைத்து அவரை தகிசர் பகுதியில் மடக்கி பிடித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் ‘அண்டிலா’ ஆடம்பர அடுக்குமாடி பங்களா அருகில் வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் முக்கிய போலீஸ் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று முகேஷ் அம்பானிக்கு வந்த கொலை மிரட்டல் போனால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.
