தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் – இன்று வழக்கம் போல பேருந்துகள் இயங்குகிறது
நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும். தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய வரம்பை அதிகரிக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய வரம்பை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று எதிர்க்கட்சிகள் தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் வேலைநிறுத்த போராட்டத்துக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை. அந்த வகையில் தமிழகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பஸ்-ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின.
சென்னையில் எப்போதும் போலவே போக்குவரத்து இருந்தது. பெரும்பாலான மாநகர பஸ்கள் ஓடின. ஆட்டோக்களும் அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டது.
போக்குவரத்து பணிமனைகள் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பிரச்சனைக்குரிய இடங்கள் என்று கருதப்பட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கோயம்பேடு பஸ் நிலையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் தமிழக எல்லை பகுதி வரை மட்டுமே செல்கின்றன.
கர்நாடக மாநிலம் மைசூர், கொள்ளேகால், சாம்ராஜ்நகர் பகுதிகளிலிருந்து வரும் அம்மாநில அரசு பஸ்கள் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டன.
இதேபோல் சத்தியமங்கலம், ஈரோட்டிலிருந்து கர்நாடகம் செல்லும் தமிழக அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. சில பஸ்கள் இயக்கப்பட்டாலும் அவை இரு மாநில எல்லையான புளிஞ்சூர் வரை செல்கிறது.
கேரளாவில் முழு அடைப்பு போராட்டமாக மாறியது. கேரளாவில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கோழிக்கோடு, கொச்சி, கோட்டயம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு வழக்கம் போல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் இருந்து திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கேரள மற்றும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி வழியாக கேரளா செல்லும் அரசு பஸ்களும் ஓடாததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
சரக்கு லாரிகள் தமிழக- கேரள எல்லையான வாளையார் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பின்னரே போக்குவரத்து தொடங்கும். கோவை, வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் இன்று மறியல் போராட்டமும் நடைபெற்றது.
திருப்பூரில் ஏ.ஐ.டி.யூ.சி., தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை. நீலகிரி மாவட்டத்திலும் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.