தொண்டனாக இருந்து அதிமுக-வுக்காக பாடுபடுவேன் – எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்

முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் தோப்பு வெங்கடாசலம்.

இவருக்கும் பவானி தொகுதி எம்.எல்.ஏ.வும் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருக்கும் கே.சி.கருப்பணனுக்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு வெடித்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சருக்கு எதிராக தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தினார். “கட்சிக்காக பணி ஆற்றாமல் தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் அமைச்சர் வேலை செய்தார் என குற்றம் சாட்டினார். பாராளுமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்று புகார்களை அள்ளி வீசினார்.

அமைச்சருக்கு எதிராக ஆளும் கட்சி எம்.எல்.ஏ. போர்க்கொடி தூக்கியதால் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தன்னிடம் இருந்த கட்சி பதவியான அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளார்.

இந்த விலகல் (ராஜினாமா) கடிதத்தை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட் டுக்கே சென்று வழங்கினார். அப்போது அவரிடம் முதல்வர் “எதற்கு இந்த அவசரம் சற்று பொறுமை காக்கவும்” என்று கூறியதாக தெரிகிறது.

எனினும் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. “எனது தனிப்பட்ட முடிவு தான் இது. தொடர்ந்து கட்சி பணி செய்வேன்” என்று கூறினார்.

முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வந்த தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும் போது, “எனது சொந்த முடிவு தான் இது. பதவி விலகலால் எந்த மன உளைச்சலும் இல்லை. ரொம்ப சந்தோ‌ஷமும் இல்லை” என்று கூறினார்.

கட்சி பதவியை விட்டு விலகல் குறித்து இன்று காலை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “கட்சிக்கு உழைக்க பதவி ஒன்றும் அவசியம் இல்லை. சிறு வயதில் இருந்தே நான் அ.தி.மு.க. தொண்டன். அம்மா இருந்த போது அமைச்சராக இருந்த நான் ஈரோடு மாவட்டத்தில் ஒரே அமைச்சராக இருந்து மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையாக உழைத்து வெற்றி பெற செய்தவன் நான். எனது பணி தொடரும். தொண்டனாக இருந்து கட்சி பணியாற்றுவேன். ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு தொடர்ந்து பாடுபடுவேன். இதில் எந்த மாறுபாடும் இல்லை” என்று கூறினார்.

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்பையொட்டி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. கட்சி பதவியை ராஜினாமா செய்த விவகாரம் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news