ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா 5-வது வெற்றியை பெற்றது.
ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன் குவித்தது.
ஆந்த்ரே ரஸலின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 40 பந்தில் 80 ரன்னும் (6 பவுண்டரி, 8 சிக்சர்), உஸ்மான் கில் 45 பந்தில் 76 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்), கிறிஸ் லின் 29 பந்தில் 54 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்திக் பாண்டியா, ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
233 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை விளையாடியது. அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்தது. இதனால் கொல்கத்தா 34 ரன்னில் வெற்றி பெற்றது.
ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. ரஸலை மிரட்டும் வகையில் தனது திறமையை வெளிப்படுத்தினார். ஆனால் இந்த ஆட்டம் பலன் அளிக்காமல் வீணானது. ஹர்திக் பாண்டியா தனி ஒருவராக போராடி 34 பந்தில் 91 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் அடங்கும்.
சுனில்நரைன், ரஸல், குர்லே தலா 2 விக்கெட்டும், பியூஸ் சாவ்லா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
கொல்கத்தா அணி தொடர்ந்து ஏற்பட்ட தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த அணி பெற்ற 5-வது வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
வெற்றி குறித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
ஆந்த்ரே ரஸல் 3-வது வீரராக முன்னதாக களம் இறக்கப்பட்டது நல்ல முடிவாகும். அவர் ஒரு சிறப்பு மிக்க வீரர் ஆவார். அவரது வளர்ச்சியை நாங்கள் நேரில் பார்ப்பது சிறந்தது. மேலும் ஒரு அதிரடியான ஆட்டத்தை ரஸல் வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.
ஹர்திக் பாண்டியா ஆட்டம் அபாரமாக இருந்தது. ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் நெருக்கடியான கட்டத்தில் சிறப்பாக பந்து வீசினார்கள். தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் 5-வது தோல்வியை தழுவியது.
இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரோகித்சர்மா கூறும்போது, “நாங்கள் வெற்றி இலக்கை நெருங்கி வந்துதான் 34 ரன்னில் தோற்றோம். ஹர்திக் பாண்டியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்கு ஆதரவாக எதிர் முனையில் வீரர்கள் இல்லை. கொல்கத்தா அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. பின்னர் வந்த ரஸல் விளாசி தள்ளி விட்டார். எஞ்சிய 2 ஆட்டங்களும் உள்ளூரில் விளையாடுவதால் மீண்டும் எழுச்சி பெறுவோம்” என்றார்.
கொல்கத்தா அணி 13-வது ஆட்டத்தில் பஞ்சாப்பை மே 3-ந்தேதி சந்திக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அடுத்த போட்டியில் ஐதராபாத் அணியை மே 2-ந்தேதி சந்திக்கிறது.