X

தொடர் தோல்விகள் ஏமாற்றம் அளிக்கிறது

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று கொல்கத்தாவில் நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்கடித்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 175 ரன் எடுத்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 50 பந்தில் 97 ரன் எடுத்தார். அவர் 7 பவுண்டரி 9 சிக்சர் அடித்தார்.

பின்னர் விளையாடிய ராஜஸ்தான் 6 விக்கெட்டுக்கு 123 (15.2 ஓவர்) எடுத்து இருந்தது. அதன்பின் இளம் வீரர் ரியான் பராக்சம்- ஜோப்ரா ஆர்ச்சர் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. அதில் ஆர்ச்சர் முதல் பந்தில் பவுண்டரியும், 2-வது பந்தில் சிக்சரும் அடித்தார்.

ராஜஸ்தான் 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்தது. பராக் 31 பந்தில் 47 ரன்னும், ஆர்ச்சர் 12 பந்தில் 27 ரன்னும் எடுத்தனர்.

கொல்கத்தா தொடர்ந்து 6 தோல்வியை சந்தித்துள்ளது. தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

இந்த தோல்வி சிறிது ஏமாற்றம் அளிக்கிறது. வெற்றி பெற முடியும் என்று நினைத்தேன். ஆனால் எங்களது நாளாக அமையவில்லை. வெற்றி பெறும்போது எப்போதுமே நல்ல உணர்வை அளிக்கும். ஆனால் வெற்றிக்கு அருகில் வந்து தோற்கும்போது ஏமாற்றம் அளிக்கும்.

கடைசி ஓவரில் 2-வது பந்தில் ஆர்ச்சர் நல்ல ஷாட் அடித்தார். ஆனால் முதல் பந்தில் எட்ஜ் ஆகி பவுண்டரி சென்று விட்டது. இதனால் இலக்கை எட்டுவது அவர்களுக்கு எளிதாகி விட்டது.

பந்து வீச்சாளர்கள் மீது அதிக நெருக்கடியை திணிக்க முடியாது. பனியின் தாக்கத்தால் பந்து ஈரபதமானது.

எங்களது அணி வீரர்கள் போராடிய விதத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் முடிவை கண்டு மகிழ்ச்சி அடையவில்லை.

டிரெசிங் அறையில் நல்ல சூழ்நிலையை வைத்திருப்பது முக்கியம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வெற்றி எல்லையை அடைய முடியாதது எங்களுக்கு நல்ல உணர்வை அளிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறும்போது, “இளம் வீரர் ரியான் பராக் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் அனுபவம் வாய்ந்த வீரர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். மேலும் அவரிடம் பந்து வீச்சு திறமையும் நன்றாக இருக்கிறது” என்றார்.

கொல்கத்தா 11 ஆட்டத்தில் 7-வது தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் 4-வது வெற்றியை (11 ஆட்டம்) பெற்றது.

Tags: sports news