தொடர் கன மழையால் டெல்லியில் வெள்ளப் பெருக்கு
வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பருவமழை பெரும்பாலும் ஒரு வாரமாக தொடர்ந்து அடைமழையாக பொழியும். ஆனால் தற்போது சில மணி நேரங்களில் அந்த அளவிற்கு மழை கொட்டி தீர்த்துவிடுகிறது.
தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் வெளியேற முடியாமல் சாலையில் தேங்கி நின்றதால் காலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலையிலும் மழை நீடித்தது. சாலைகள் வெள்ளத்தில் மிதப்பதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.