Tamilவிளையாட்டு

தொடர்ந்து 2 போட்டிகள் தோல்வி – கேப்டன்ஷிப்பில் மோசமான சாதனைப் படைத்த ஹர்திக் பாண்ட்யா

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டியில் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா இத்தொடரை வெல்ல எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

முன்னதாக உலக கோப்பைகளில் தோற்றாலும் இருதரப்பு தொடர்களில் இந்தியா மிரட்டலாக செயல்பட்டு வெற்றி பெறுவது மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்து வந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியதன் மூலம் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த 2 தொடர்ச்சியான போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன் டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற எந்த கேப்டன்கள் தலைமையிலும் அடுத்தடுத்த 2 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா தோற்றதில்லை. அதன் வாயிலாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அடுத்தடுத்த 2 டி20 போட்டிகளில் தோல்வியை சந்தித்த முதல் கேப்டன் என்ற மோசமான சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.

மேலும் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரிலும் 1 தோல்வியை சந்தித்த இந்தியா இந்த தோல்வியையும் சேர்த்து மொத்தம் 3 தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் வாயிலாக 18 வருடங்கள் கழித்து ஒரு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக 3 தோல்விகளை இந்தியா பதிவு செய்துள்ளது. கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் சென்ற போது இந்தியா 3 தோல்விகளை சந்தித்தது.