Tamilவிளையாட்டு

தொடர்ந்து சிறப்பாக விளையாடி இறுதி இலக்கை அடைவோம் – சேப்பாக் கில்லீஸ் அணி வீரர்

டி.என்.பி.எல். போட்டியில் கோவை கிங்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஹாட்ரிக் வெற்றிபெற்றது.

நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கோவை கிங்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்னே எடுக்க முடிந்தது.

கேப்டன் அபினவ் முகுந்த், ஷாருக்கான் ஆகியோர் அதிகபட்சமாக தலா 22 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஹரிஷ்குமார் 13 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். பெரியசாமி, முருகன், அஸ்வின் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 13.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கோபிநாத் 41 பந்தில் 82 ரன் எடுத்தார். இதில் 10 பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். கங்கா ஸ்ரீதர் ராஜ் 31 ரன் (அவுட் இல்லை) எடுத்தார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பெற்ற ஹாட்ரிக் வெற்றி ஆகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் தோற்றது. அதைத்தொடர்ந்து திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளையை வீழ்த்தி இருந்தது.

ஆட்ட நாயகனாக விருது பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் ஹரிஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

இந்த தொடரில் நாங்கள் மொத்த அணியினரும் நன்றாக விளையாடி வருகிறோம். இதனால் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு காரணமாக நானும் இருந்துள்ளேன் என்று கூறும்போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இதுபோல் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. எங்கள் அணியின் வெற்றிக்கு கோபிநாத்தின் அதிரடி ஆட்டமும் கைகொடுத்தது. இதனால் எளிதில் வெற்றி பெற்றோம். இதுபோல தொடர்ந்து சிறப்பாக விளையாடி எங்கள் இறுதி இலக்கை அடைவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இந்த வெற்றிமூலம் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு மீண்டும் முன்னேறியது. 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. திண்டுக்கல் அணியைவிட ரன்ரேட்டில் முன்னிலை பெற்றுள்ளதால் முன்னேற்றம் அடைந்துள்ளது.

கோவை கிங்ஸ் அணி சந்தித்த 2-வது தோல்வி ஆகும். அந்த அணி ஏற்கனவே டூட்டி பேட்ரியாட்சிடம் 6 ரன்னில் தோற்று இருந்தது. கோவை அணி 2 வெற்றி 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

நெல்லையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன. திண்டுக்கல் அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. காரைக்குடி காளை 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *