X

தொடரும் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா – புதுவை காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து

புதுவையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் 2-வது அமைச்சராக இருந்த நமச்சிவாயம் அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜனதாவில் இணைந்தார். அவருடன் ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தானும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடேய அரசியலில் இருந்தே விலக போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் அறிவித்தார். 25 ஆண்டு எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய மல்லாடி கிருஷ்ணாராவுக்கு ஏனாம் பிராந்தியத்தில் பாராட்டு விழாவும், சட்டசபையில் விருதும் வழங்கப்பட்டது.

இதன்பின் தனது அமைச்சர் பதவியை மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு அனுப்பி வைத்தார். சட்டசபையில் உள்ள அமைச்சர் அலுவலகம், புதுவையில் அரசு அளித்த வீடு, அரசு கார் ஆகியவற்றையும் மல்லாடிகிருஷ்ணாராவ் ஒப்படைத்திருந்தார்.

மேலும், தனது துறை சார்ந்த கோப்புகளையும் பார்க்கவில்லை. இருப்பினும், தன்னிடம் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா கடிதம் ஏதும் தரவில்லை என நாராயணசாமி மறுப்பு தெரிவித்தார். ராஜினாமாவை முதல்- அமைச்சர் நாராயணசாமி ஏற்காததால் அவர் பதவியில் நீடித்தார்.

இந்த நிலையில் நேற்று திடீரென தனது எம்.எல்.ஏ. பதவியையும் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவகொழுந்துவுக்கு மல்லாடிகிருஷ்ணராவ் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், இதுவரை தன்னிடம் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா கடிதம் வரவில்லை என சபாநாயகர் சிவக்கொழுந்து கூறியுள்ளார். மல்லாடி கிருஷ்ணாராவை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது போனை அவர் எடுக்கவில்லை.

புதுவையில் மொத்தம் உள்ள 30 எம்.எல்.ஏ.க்களில் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஒரு தொகுதி காலியாக இருந்தது. தொடர்ந்து, நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடிகிருஷ்ணாராவ் என காங்கிரசில் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் 11 ஆக குறைந்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 11, தி.மு.க. 3, அரசுக்கு ஆதரவு தரும் சுயேச்சை ஒருவர் என 15-ம், எதிர்கட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க. 4 என 11 பேர் உள்ளனர். நியமன பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் சேர்த்தால் எதிர்கட்சியில் 14 பேர் உள்ளனர்.

தற்போது புதுவை சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 29 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். இதில் 15 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தால் மெஜாரிட்டி கிடைக்கும். காங்கிரஸ் அரசுக்கு தி.மு.க., சுயேட்சையுடன் 15 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது.

காங்கிரசுக்கு அளித்து வரும் ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ. வாபஸ் பெற்றாலோ, மேலும் ஒரு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தாலோ காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழக்கும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் முகாமிட்டிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தான் புதுவை திரும்பியதும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.