X

தொடரும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை – தமிழக மீனவர்கள் பாதிப்பு

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையேயும் அந்நாட்டு கடற்படை தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அவ்வப்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை எடுத்துக்கொண்டு அவர்களை விரட்டி அடிப்பதும், விசைப்படகுகளுடன் மீனவர்களை சிறைப்பிடிப்பதும் வாடிக்கையாகவே இருக்கிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்படி துறைமுகத்திலிருந்து நேற்று மீன்துறை அலுவலக அனுமதியுடன் 87 விசைப்படகுகளில் 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இதில் பெரும்பாலான மீனவர்கள் மீன்வளம் அதிகமுள்ள வங்கக்கடலில் இந்திய கடல் எல்லை பகுதியான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் வந்த வீரர்கள் தமிழக மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். தொலை தூரத்தில் இலங்கை கடற்படை கப்பல் வருவதை அறிந்த ஒருசில விசைப்படகுகள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டன. இந்திய கடல் பகுதியாக இருந்தாலும் அவர்களின் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் அவர்கள் புறப்பட்டனர். இருந்தபோதிலும் ஒரு விசைப்படகை மட்டும் செல்லவிடாமல் தடுத்த இலங்கை கடற்படையினர் அதனை சிறைப்பிடித்தனர்.

இதில் தமிழ்ச்செல்வன் என்பவருக்கு சொந்தமான படகையும், அதிலிருந்த விஜி (வயது 28), தினேஷ் (26), ரஞ்சித் (27), பக்கிரிசாமி (45), கமல் (25), புனுது (41), கார்த்திக் (27) உரிமையாளர் தமிழ்ச்செல்வன் (37) உட்பட 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அவர்களுடன் விசைப்படகையும் இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் 12 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வருவது மீனவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையே ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பிளாஸ்டிக் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிக்க கூடாது என்று ராமேசுவரம் மீனவர்களை எச்சரித்துள்ளனர்.

மேலும் ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி, அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை அபகரித்துக் கொண்டு மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்து உள்ளனர். இதையடுத்து மீனவர்கள் சோகத்துடன் இன்று காலை ராமேசுவரத்திற்கு திரும்பி வந்தனர். 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகள் உள்ளிட்ட மீன்பிடி பொருட்களை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாகவும், ஒவ் வொரு படகிற்கும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர்.