20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் 51 ரன்னும், இஷான் கிஷன் 70 ரன்னும் எடுத்தனர்.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- லோகேஷ் ராகுல் களம் இறங்குவார்கள் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஐ.பி.எல்.லுக்கு முன்பு சூழ்நிலைகள் வித்தியாசமாக இருந்தன. தற்போது லோகேஷ் ராகுலை டாப் வரிசையில் இருந்து கீழே இறக்குவது கடினமானது. ரோகித் சர்மா உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் நான் 3-வது வரிசையில் களம் இறங்குவேன். ரோகித் சர்மாவுடன் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக விளையாடுவார்.
முதல் ஆட்டத்தில் எப்படி தொடங்க போகிறோம் என்ற அடிப்படையில் நாங்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறோம். பயிற்சி ஆட்டத்தில் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகளை நாங்கள் பார்ப்போம்.
ஒரு குழுவாக ஆற்றலையும், வேகத்தையும் உருவாக்குவதுதான் தற்போது யோசனையாக இருக்கிறது. கடந்த காலத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று இருக்கிறோம். அதே ஆற்றலை உருவாக்க விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.