தமிழில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமான டாப்சி தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இந்தியிலும் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
இந்நிலையில், டாப்சி அளித்துள்ள பேட்டியில், ‘‘எனக்கு வாழ்நாள் முழுவதும் சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தேவையான பணம் சம்பாதித்து விட்டதும் இனி ஓய்வு எடுத்து விடலாம் என்று எப்போது தோன்றுகிறதோ அப்போது சினிமாவை விட்டு வெளியேறி விடுவேன். என் எண்ணங்கள் இப்போதும் நடுத்தர மக்கள் வாழ்க்கை முறையிலேயே நின்று விட்டது. ஆடம்பர வாழ்க்கை எனக்கு சுத்தமாக பிடிக்காது.
இப்போதும் கூட ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் ஒன்றுக்கு பத்து முறை யோசிப்பேன். பேரம் பேசுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி செல்போன்களை புதிது புதிதாக வாங்குவது. கார்களை புதிதுபுதிதாக மாற்றுவது எனக்கு பழக்கம் இல்லை. நான் முதல் முறையாக சம்பாதித்து வாங்கிய கார் இப்போதும்கூட என்னிடமே இருக்கிறது’’ என்றார்.