X

தேவேந்திர பட்னாவிஸுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி! – கேள்வி எழுப்பும் சிவசேனா

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் மகா விகாஷ் முன்னணி ஆட்சி அமைத்து உள்ளது. இந்தநிலையில், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் மந்திரிகள் அரசியலமைப்பு விதிமுறைகள்படி பதவி ஏற்கவில்லை என முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டசபை விதிமுறைகளின் படி கூட்டப்படவில்லை என்று கூறிய அவர், தேசியவாத காங்கிரசின் திலீப் வல்சே பாட்டீல் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டதையும் எதிர்த்தார்.

இந்தநிலையில், தேவேந்திர பட்னாவிசை சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா சாடி உள்ளது. இது தொடர்பாக அதன் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

நாட்டு மக்கள் எல்லோரையும் இருளில் வைத்து விட்டு பெரும்பான்மை இல்லாமல் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற மனிதர் என வரலாற்றில் இடம் பிடித்ததை தேவேந்திர பட்னாவிஸ் நினைவில் கொள்ளவேண்டும். அந்த பதவியில் அவரால் 80 மணி நேரம் தான் இருக்க முடிந்தது.

இந்த அவப்பெயரில் இருந்து அவர் விடுபட விரும்பினால் அவர் எதிர்க்கட்சி தலைவருக்கான விதிமுறைகளின்படி செயல்பட வேண்டும். இதற்காக அவர் முன்னாள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஏக்நாத் கட்சேயிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவராக அவர் தனது கண்ணியத்தை காத்து கொள்ள வேண்டும். முதல்-மந்திரியாக இருந்து அவர் செய்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. மராட்டியத்தில் மக்கள் தீர்ப்பு பாரதீய ஜனதாவுக்கு இல்லை என்பது இப்போது உண்மையாகி உள்ளது. பட்னாவிஸ் முதல்-மந்திரி ஆவதற்கு டெல்லி ஆதரவாக இருந்தது. ஆனால் அந்த அரசாங்கம் மூன்றே நாளில் கவிழ்ந்து விட்டது. இதனால் பட்னாவிசை எதிர்க்கட்சி தலைவராக ஆக்கி விட்டார்கள்.

அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதாவை சேர்ந்தவர் முதல்-மந்திரியாக பல ஆண்டுகள் இருந்தார். ஆனால் அங்கு காங்கிரசிடம் தோற்றதுடன் அவர் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படவில்லை.

இதேபோல ராஜஸ்தானிலும் பாரதீய ஜனதா முதல்-மந்திரியாக இருந்த வசுந்தரா ராஜேவையும் அந்த கட்சி தேர்தல் தோல்விக்கு பின்னர் எதிர்க்கட்சி தலைவர் ஆக்கவில்லை.

ஆனால் மராட்டியத்தில் தேவேந்திர பட்னாவிசை டெல்லி ஆதரிப்பதின் பின்னணி என்னவோ?

எம்.பி.க்களை பேச அனுமதிப்பதில்லை என பிரதமர் மோடிக்கு எதிராக கிளர்ச்சி செய்த முதல் பாரதீய ஜனதா எம்.பி. என்ற பெயரை பெற்ற நானா பட்டோலே தற்போது காங்கிரசுக்கு திரும்பி மராட்டிய சட்டசபை சபாநாயகராகி விட்டார். இனி சபையில் தேவேந்திர பட்னாவிஸ் பேச வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி நானா பட்டோலே முடிவு செய்வார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags: south news