‘தேவர் மகன் 2’ எடுக்க விருப்பம் தெரிவித்த இயக்குநர் சேரன்!
ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு, பொற்காலம் என தமிழில் வெற்றி படங்களை இயக்கியவர் சேரன். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் தன் திறமையை நிரூபித்தவர். பிக்பாஸ் 3-வது சீசனில் சேரன் போட்டியாளராக கலந்து கொண்டது மக்களை பெரிதும் ஆச்சர்யப்படுத்தியது. அவர் இந்த முறை டைட்டில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் 2 வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் சென்னை வடபழனியில் ஒரு தனியார் திரையரங்கில் நடைபெற்ற ‘வெல்கம் பேக் சேரன்’ என்ற நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்குபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் பற்றி நன்றாக தெரியும். நான் இயக்குநர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதன் என்பதை மக்களுக்கு புரிய வைத்துவிட்டேன்.
நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக காரணம் நடிகர் விஜய்சேதுபதி தான். அவரை வைத்து விரைவில் படம் இயக்க உள்ளேன். என்னிடம் ஒருநாள் போனில் பேசிய அவர், ‘நீங்கள் வெற்றி இயக்குநர் என்பது இப்போது இருக்கும் இளம் தலைமுறைகளுக்கு தெரியாது. அவர்கள் மனதில் எல்லாம் இடம் பிடிக்க வேண்டும். எல்லோர் இல்லத்திலும் சேரன் எளிதாக நுழைய வேண்டும். அதற்கு நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டும்‘ என்றார்.
அவர் ஆலோசனையின்படி தான், நான் பிக்பாஸ் நிகழ்ச்சில் பங்கு பெற்றேன். பிக்பாஸ் நிகழ்ச்சி எழுதி இயக்கப்படும் நிகழ்ச்சி அல்ல. கூடிய விரையில் விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்குவேன்” என சேரன் தெரிவித்தார். கமலை வைத்து தேவர் மகன் 2 படத்தை இயக்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சேரன், “பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது கமலை வைத்து தேவர் மகன் 2 படத்தை இயக்க வேண்டும் என விரும்பினேன். அதற்கான கதையும் என்னிடம் உள்ளது. கமல் சம்மதித்தால் தேவர் மகன் இரண்டாம் பாகம் எடுப்பேன். இதை கமல்ஹாசனிடமும் தெரிவித்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.