Tamilசெய்திகள்

தேர்தல் வந்தால் தான் பெட்ரோல் விலை உயர்வில் இருந்து மக்கள் தப்பிக்க முடியும் – ராகுல் காந்தி பேச்சு

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோலை பொறுத்தவரையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் விலை குறைந்த நேரத்தில் ஒரு லிட்டர் ரூ.100-க்கு கீழ் சென்று, விலை உயரத் தொடங்கியதும் மீண்டும் ரூ.100-ஐ கடந்து, தற்போது ஒரு லிட்டர் ரூ.104 என்ற விலையில் விற்பனை ஆகிறது.

டீசல் விலை பெட்ரோலை விட கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தினமும் பெட்ரோலை காட்டிலும் டீசல் விலை உயர்வுதான் அதிகமாக இருக்கிறது. நேற்றைய விலை உயர்வு மூலம் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் டீசல் விலை சதம் அடித்துவிட்டது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய-மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்பட பல தரப்பினரும் கோரிக்கைகள் விடுத்த வண்ணம் உள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை  உயர்வுக்கு மத்திய பா.ஜ.க. அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை சாடி தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், பெட்ரோல் விலை உயர்வு மூலம் வரிக்கொள்ளை நடைபெறுகிறது. தேர்தல் எங்காவது நடைபெற்றால் விலையேற்றத்தில் இருந்து மக்களுக்கு சற்று விடுதலை கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.