தேர்தல் முன் எச்சரிக்கை நடவடிக்கை – 14,343 ரவுடிகள் கைது

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி முன் எச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் ரவுடிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக டி.ஜி.பி. அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 21 ஆயிரத்து 289 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 732 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரத்து 183 பேர் நன்னடத்தை பிணைய பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

நீதிமன்றத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த 14 ஆயிரத்து 343 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தனிநபர் பாதுகாப்புக்காக உரிமம் பெற்று வைத்திருந்த 18 ஆயிரத்து 593 துப்பாக்கிகள் திரும்ப பெறப்பட்டன.

தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் உரிமம் இல்லாமல் தனிநபர்கள் வைத்திருந்த 16 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 75 கிலோ வெடிமருந்து, திருப்பூர் மாவட்டத்தில் 150 கிலோ வெடிமருந்து, 89 டெட்டனேட்டர்கள், 786 ஜெலட்டின் குச்சிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 450 டெட்டனேட்டர்கள், 375 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக 1635 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 9095 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக மதுபானம் விற்றதாக 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டசபை தேர்தலின் போது பிரச்சனை ஏற்படும் பகுதிகளாக 3261 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு முன்எச்சரிக்கையாக 3188 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இதுவரை 65 பட்டாலியன் துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். 525 இடங்களில் துணை ராணுவத்தினர், போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools