தேர்தல் பிரச்சினைகளை சமாளிக்க 200 வழக்கறிஞர்கள் நியமிப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 19-ந்தேதி நடைபெறுவதால் அரசியல் கட்சித் தலைவவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
தேர்தல் பிரச்சனைகளை சமாளிக்கவும், தேர்தல் அதிகாரிகளை சந்தித்து முறையிடுவதற்கும் தி.மு.க. வில் ஏராளமான வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் தொகுதிக்கு 50 வழக்கறிஞர்கள் வீதம் மொத்தம் 200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுக் கட்சியினரால் தொகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகளை போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பது, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பது என வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதற்காக தலைமைக் கழகம் சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் வழக்கறிஞர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
வீடு வீடாக “பூத் சிலிப்பை” தேர்தல் ஊழியர்கள்தான் வினியோகம் செய்ய வேண்டும். அ.தி.மு.க.வினரால் வழங்கப்பட்டால் அதை தடுத்து நிறுத்த வேண்டும். தேர்தல் அதிகாரிகள் கவனத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
தற்போது 4 தொகுதியிலும் வழக்கறிஞர் பிரிவு அணியினர் முகாமிட்டு அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிர்வாகிகளுடன் சென்று பிரச்சனைகளை கேட்டு வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 4 தொகுதியிலும் பிரசாரம் செய்துள்ள நிலையில் வருகிற 13, 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் 2-ம் கட்டமாக மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான சுற்றுப்பயண ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது.