முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் அமைச்சராக இருந்தபோது 48 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளேன். மீண்டும் இந்த மாவட்டம் வளர்ச்சி பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுகிறது. ஆனால் இங்குள்ள மக்களுக்கு கட்டுமான பணிக்காக கனிம வளங்கள் கிடைப்பதில்லை.
கனிமவள டாரஸ் லாரிகள் மோதி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இந்த மாவட்டத்தின் அமைச்சர் மனோ தங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும். எந்த லாரியாக இருந்தாலும் அவசியம் இல்லாமல் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம். கனிம வளங்கள் கடத்தல் தொடர்பாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகிறார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் இதுவரை இல்லை. இதிலிருந்து அவர் பொய் சொல்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக கல், மண் கிடைக்கவில்லை. இதனால் 3 ஆண்டு காலத்திற்கு மேல் நான்கு வழிச்சாலை பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக நான்கு வழிசாலை அமைக்கும் பணிக்காக 1046 கோடி ரூபாய் கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் 350 கோடி ரூபாய் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தின் ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அமலாக்கத்துறை பொறுத்திருந்து நடவடிக்கை மேற்கொள்ளும். அந்த வகையில் தான் காத்திருந்து அவர்கள் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள். கெஜ்ரிவாலுக்கு பலமுறை அவர்கள் சம்மன் அனுப்பியுள்ளார்கள். ஆஜராகவில்லை. அப்போதே அவர் ஆஜர் ஆகி இருந்தால் இதுபோன்ற நடவடிக்கைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தல் பத்திர விவகாரத்தை பொறுத்தவரை நாங்கள் எதையும் மறைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.