தேர்தல் பத்திரங்கள் வழக்கு – இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது

அரசியல் கட்சிகளிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் வகையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் என்ற திட்டத்தை கொண்டுவந்தது.

இந்த திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்கள் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ. 1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும். தனி நபர்கள், நிறுவனங்கள் என தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும்.

ஒரு நபர் அல்லது நிறுவனம் சார்பில் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். தேர்தல் பத்திரங்களை வாங்கும் தனி நபர், நிறுவனங்கள் யார் என்ற விவரங்கள் பொது மக்களுக்கோ அல்லது நன்கொடையை பெறும் அரசியல் கட்சிக்கு அளிக்கப்படாது. எனினும், அரசு மற்றும் வங்கி சார்பில் இந்த விவரங்களை சேகரித்துக் கொள்ளலாம்.

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்க இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news