தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.கவின் கொள்கை வெளிப்பட்டுவிட்டது – உத்தவ் தாக்கரே தாக்கு
எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் பா.ஜனதா அதிகபட்சமாக சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1,400 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
தேர்தல் பத்திரம் மூலமாக பா.ஜனதா அதிக நன்கொடை பெற்றுள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. மிரட்டி பணம் பெற்றதாக குற்றம் சாட்டுகின்றன.
இந்த நிலையில் பா.ஜனதாவின் கொள்ளை இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:-
தேர்தல் பத்திரம் தொடர்பான வெளிப்பாடுகள் காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளை அடித்துவிட்டது என்று தொடர்ச்சியாக கூறிவரும் பா.ஜதானவின் கொள்ளையை வெளிப்படுத்தியுள்ளது. கொள்ளையடித்த இவர்கள் கையில் நாட்டை கொடுக்கப் போகிறீர்களா?. நாட்டு மக்கள் விக்சித் பாரத் (வளர்ந்த நாடு) குறித்து கனவு கண்டு கொண்டிருக்கும்போது, பா.ஜனதா அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்து நாட்டை கொள்ளை அடிக்க விரும்புகிறது.
எங்களது கட்சி தலைவர்களுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. கார்பரேட் நிறுவனங்கள் பா.ஜனதாவுக்கு அதிக நன்கொடைகள் வழங்க மிரட்டப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய நிறுவனங்கள் ஒப்பந்தங்களை பெற்றுள்ளன. அதற்குப் பதிலாக பா.ஜனதாவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடைகள் வழங்கும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
பா.ஜனதாவில் மகாராஷ்டிரா மாநிலத்தை கொள்ளை அடிக்க முடியாத காரணத்தில், தன்னுடைய தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.