Tamilசெய்திகள்

தேர்தல் பணியின் போது ஊழியர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு – தலைமை தேர்தல் ஆணையர்

தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:

தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள் 3 லட்சத்து 27 ஆயிரத்து 903 பேருக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களில் 47 ஆயிரத்து 610 பேரிடம் இருந்து வாக்களிக்கப்பட்ட தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் அல்லாதவர்களுக்கும் தேர்தல் பணி சான்றிதழ் வழங்கப்படுகின்றன. அவர்களும் வாக்குப்பதிவு நாளன்று சொந்த தொகுதிக்குள் வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க முடியும். அந்த வகையில் மொத்தம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 51 தேர்தல் பணி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ வீரர்களுக்கான சர்வீஸ் ஓட்டுகள் 67 ஆயிரம் உள்ளன. அவர்களுக்கு சர்வீஸ் ஓட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டுவிட்டன.

தேர்தல் பணியில் இருக்கும்போது ஊழியர் யாருக்காவது மரணம் நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும். தேர்தல் பணி காலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்து கொலை செய்யப்பட்டுவிட்டால், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும். இந்த தொகையை மத்திய அரசு அளிக்கும். போலீஸ் ஓட்டுகள் (விண்ணப்பித்தவர்கள்) 24 ஆயிரத்து 971 உள்ளன. அவர்களில் 10 ஆயிரத்து 657 பேர் தேர்தல் பணி சான்றிதழ் பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி மீறல்களுக்காக 4 ஆயிரத்து 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேலூரில் நடந்த வருமான வரித்துறையின் சோதனை குறித்து அவர்களின் அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. அனேகமாக அதை அவர்கள் அளித்திருக்க வேண்டும். அதுபோல ஆணையம் கோரியபடி போலீசில் அறிக்கையும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நான் எந்த அறிக்கையையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை.

அது மிகுந்த ரகசியத்துக்கு உட்பட்ட அறிக்கை என்பதால் அதுபற்றி வெளிப்படையாக பேசிவிட முடியாது. அந்த அறிக்கையில் உள்ள கருத்துகளின்படி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க. முன்வைத்துள்ளது. அதுபற்றி தேர்தல் ஆணையத்துடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்த தேர்தலில் மொத்தமுள்ள 67 ஆயிரத்து 720 வாக்குச்சாவடிகளில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு சக்கர நாற்காலி வைக்கப்பட்டு இருக்கும். அதை இயக்குவதற்கு ரூ.250 சம்பளத்தில் தன்னார்வலர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பார். எனவே மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் தேவைப்பட்டால் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *